Saturday, December 3, 2016

ஏ9..!!!

உலக தமிழர்களின் அடையாளப்பாதை
புத்தனில் தொடங்கி  கந்தனில் முடியும் பாதை

அடிக்கடி மூடுபாதையில்
வராலாறு படைத்திருக்கின்றது
திண்பண்டங்களும் சிறு தேங்காயும்
வாகன விலைக்கு விற்றுபோயிருக்கின்றது


செந்நாட்டு அரசன்போல் பாதுகாப்பில்
நீண்டு வலைந்துகிடக்கின்றது.
அன்று யுத்தத்தின் இரத்தத்தில்….
இன்று நாளுக்கு இரண்டாய்
வீதி விபத்தின் கோரத்தில்…
என்றும் அடிக்கடி இரத்த வெள்ளத்தில்
குளித்துக்கிடக்கின்றது..!!!




ஊடகங்களில் வாயிலும்
வெளிநாட்டுக் காரன் கண்ணிலும் அடிக்கடி
போதையேற்றிய பாதை
வீர மங்கைகள் எம்பெண்கள் உலாவி திரிந்த
பெருமைகொண்ட பாதை..!!!


யுத்தத்தின் பிடியில் பெயர் பெற்று
செம்மண் புழுதி காற்றில் கலந்து
வானளவு உயர்ந்த பாதை..
வானவூர்திகளும் வாகனத்துள் ஒழிந்து
பயணித்த பாதை..!!!


வரலாற்று கதைகளெல்லாம்
கடந்து வரும்- மதம்கொண்டு மனம் கெட்ட
மனிதரின் மனதையும் சொல்லிவரும்
இந்த பாதை…!!!!




செல்களின் செதுக்கள்களில்
அன்று ஆயிரமாயிரம் உருக்கள் பெற்றது
வடக்கின் வசந்தத்தில்
இன்று செப்பணிட்டு சிரித்து
உள்ளே விம்மலுடன் விசும்புகினறது..!!!


காவலரண்களுக்கு இங்கு பஞ்சமில்லை
ஓமந்தை முதல்
துரையப்பா மைதானம் வரை..!!!
மனித ஓலங்கள் குறையவில்லை
தமிழர் மேளம் முழங்கிடும் வரை..!!!


தமிழ்ச்சுவை கொண்ட 
விருந்தகங்களுக்கு பஞ்சமில்லை
சிங்கள மொழியும் 
தங்கசிலை புத்தனையும்
தம்புள்ளையில் தரிசிக்க 
முடியாது போவதுமில்லை..!!!


வீதியோர விளக்குகள்
கிளிநொச்சியில் ஜொலிக்கிறது
ஏ9 தாண்டி உள்ளே சென்றால்
கோவில்களும் செல்லடியில்
ஊனமாய் கிடக்கினறது..!!!


உடைந்த நீர்தாங்கி
அடையாளமாகி போனது
தெய்வங்களும் அவமானத்தில்
தூக்கிட்டுக்கொண்டது..???



இலங்கையின் கழுத்தின் அசலக்க வீரனின்
சிலை உயர்ந்து நிற்கின்றது
தமிழுக்காய் தன்னுயிர் தியாகித்த
வீரர்களின் உருவங்கள் எல்லாம்
மண்ணோடு மண்ணாய் 
புதைக்கப்பட்டுவிட்டது..!!!



முள்ளிவாய்கால் போய்வந்த வைரமும்
இதன் வழியே பயணிக்கவில்லையா..???
இவர் வரிகளில் இதையெழுத
மறந்து போனதும் தெரியவில்லையா..???



மாண்டு மடிந்த வரலாறுகளும்
மறந்துபோகுமா..??
மீண்டு எழுந்து நின்று
புது காவியம் எழுத அது மறைந்துபோகுமா..???
தீது செய்த மாற்றான் வாழ்வு செழிக்குமா..??
முள்வேளிக்குள்
முடங்கிக்கிடந்த தமிழர்தம் வாழ்வு
முடிந்து போகுமா..???


இது வெறும் பாதையல்ல
வலிகளின் வரிகளையும்
துரோக விதிகளின் வெறுப்புக்களையும்
சுமந்துக்கொண்டு கிடக்கும்
உலக தமிழர்களின் அடையாளப்பாதை…!!!

-பிசாசு- தமிழன்



No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...